குருஷேத்திரம்! அத்தியாயம் 1

குருஷேத்திரம்!

அத்தியாயம் 1

அந்திமாலை நேரத்தின் கதிரவனின் பொன்னிறக்கதிர்கள் தழுவிக் கொண்டிருந்ததால், ஆகாயம் முழுவதும் சிகப்பு புரீஷம்வள்ளி மலர்களின் கூட்டங்களுக்கு இடையில் ஆங்காங்கே அதனுடன் மஞ்சள் அல்லிகளையும், பேரரளிப் பூக்களையும் கலந்து தெளித்தது போல், செந்நிறத்தில் மஞ்சள் ஏறி, நிறங்கள் இரண்டும் கலந்து காண்பவரின் கண்களைக் கவர்ந்து நிற்க, வானத்தைத் தொட்டுவிடும் அளவிற்குப் பெருமாளிகைகள் போன்று கட்டிடங்களும், பெரிய கடைகளும், பளபளக்கும் மின் விளக்குகள் சாலைகளின் இருபுறங்களிலும் ஜெகஜோதியாய் ஜொலித்துக் கொண்டிருந்ததில், விழிகளைப் பளிச்பளிச்சென்று தன் விளக்குகளால் தனக்குள் இழுத்துக் கொண்டிருந்ததில், அந்நகரத்தின் வனப்பு அழகாய் வெளிப்பட்டது….

பெருஞ்சாலைகளில் இருந்து சிலந்தி வலையெனச் சிறியனவும், பெரியவனவாகவும் தெருக்களும் சந்துக்களும் பிரிந்துச் சென்று, பார்வையில் விழும் அனைத்து இடங்களையும் நிறைத்து இருக்கும் மக்கள் கூட்டத்தின் இன்பத்தையும், துன்பத்தையும், மகிழ்ச்சி ஆரவாரத்தையும், ஆயாச பெருமூச்சுகளையும், சலிப்பு முனகல்களையும், கீர்த்தனை சிரிப்புகளையும், அட்டகாச ஆர்ப்பரிப்புகளையும், மழலைகளின் யாழிசைக் குரலையும் கலந்த ஒலிகளைச் சுமந்திருக்க, சாலைகளின் இருபக்கங்களிலும் நவநாகரிக உடைகளிலும், பாரம்பரிய உடைகளிலும் பெண்களும் ஆண்களும் நடந்தும், அமர்ந்தும் கதைப் பேசிக் கொண்டு இருக்க, பெரும் சத்தத்தோடு பேருந்துக்களும், மற்ற பிற வாகனங்களும் ஊர்ந்துக் கொண்டும், விரைந்துக் கொண்டும் இருக்க, காண்போரின் கண்கள் அனைத்துக்கும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காட்சிகளை விரித்து வைத்திருந்தது, கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் அமைந்துள்ள, தமிழகத்தின் தலை நகரம், இந்தியாவின் நான்காவது பெரிய மாநகரமாம் சென்னை மாநகரம்…

அந்நகர மக்களின் வருமானத்தின் பெரும்பங்கை விழுங்கிக் கொண்டிருக்கும் மாநகரத்தின் மிகப் பெரிய வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதியின் இதயத்தில் வீற்றிருப்பது போல் இருந்தது, அந்தப் பல அடுக்கு மாடிகள் கொண்ட ஷாப்பிங் மால்…

எறும்புகள் போல் சாரைசாரையாகப் பொது மக்களின் கூட்டம் மாலை [Mall] சுற்றிலும் சூழ்ந்திருக்க, வாயிலில் அமைந்திருந்த சிறு கடைகளிலும், நுழைவாயிலிற்கு அருகிலும் இளம் பெண்களும், இளைஞர்களும், அவர்களுக்கு இணையாகப் பெரியவர்களும் நின்றுக் கொண்டும், அமர்ந்துக் கொண்டும் கதைகள் பேசிக் கொண்டிருக்க, மாலின் சுற்றுபுற சுவர்களில் உட்கார்ந்து கடந்தகாலத்தின் அழுத்தம் இல்லாது, எதிர்காலத்தின் கவலைகள் அற்று, நிகழ்காலத்தின் சுவையை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும் வாலிபர் கூட்டங்கள் அரட்டை அடித்துக் கொண்டிருக்க, சென்னையின் அலைகடலெனத் திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தினரிடையும், சாலையின் சுவடே தெரியாத அளவிற்குப் பெருகி அடைந்து இருக்கும் வாகன நெரிசலையும் தாண்டி, சர்ரென்று வளாகத்தின் நுழைவாயிலிற்குள் நுழைந்தது, பளபளக்கும் நிறத்துடன் பார்ப்பவர்களைச் சுண்டியிழுக்கும் விலையுயர்ந்த,
இரு கார்கள்…

ஒன்று மெட்டாலிக் சிகப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் கூப் [Metallic Red Rolls-Royce Phantom Coupe] மற்றொன்று கருப்பு நிற பெண்ட்லி ப்ரூக்லேண்ட் [Black Bentley Brookland]…

பல கோடிகள் பெருமான இரு கார்களும் புயல் வேகத்தில் வளாகத்திற்குள் நுழைந்த நொடி அங்குப் பெரும் சலசலப்பு ஏற்பட, கார்களின் அழகில், வனப்பில், அவை வந்த வேகத்தில் மதிமயங்கிய இளைஞர்கள் தாங்கள் அமர்ந்திருந்த வளாகத்தின் பக்கச் சுவர்களில் இருந்து தங்களையும் அறியாமல் ஒரே நேரத்தில் கீழே குதித்து இறங்கினார்கள்….

திறந்திருந்த கார்களின் முன் பக்க கண்ணாடிகளின் வழியே காரை செலுத்தி வந்த ஆண்களைப் பார்த்திருந்த இளம் பெண்கள் அவர்களின் கம்பீரத்தோடு கலந்த கவர்ச்சியான அழகில் ஸ்தம்பித்து, அரண்டுப் போய், விழிவிரித்து இமைகள் மூடாமல் வாய் பிளந்து பார்த்திருந்தார்கள் என்றால், வளாகச் சுவர்களில் இருந்து தாவிக் குதித்து இறங்கிய வாலிபர்களைக் கண்டு திடுக்கிட்ட கடைக்காரர்கள் தாங்களும் தங்களின் பார்வையைக் கார்களின் மீது வீசினார்கள்….

நுழைவாயிலில் ஒன்றாக நுழைந்திருந்தாலும், நுழைந்த அந்த நொடியே மின்னல் போல் கிழக்கும் மேற்குமாக இரு வேறு திசைகளில் பிரிந்து விரைந்த கார்கள் இரண்டும் கார் நிறுத்தும் [parking] வளாகத்திற்குள் புகுந்தவர்கள் நேருக்கு நேராகச் சீறிப்பாய்ந்து வர, இரு கார்களும் ஒன்றோடு ஒன்றாக மோதுவது போல் ஜெட் வேகத்தில் வந்து கிரீச்சிட்டு நின்ற இடத்திற்கு அருகில், ஒரு கார் மட்டும் நிறுத்தும் அளவிற்குக் காலியாக இருந்த இடத்தைக் கண்டவர்கள் காரை விட்டு இறங்காமல், தங்கள் காரின் இஞ்சினை அணைக்காமல், மாறாக அதன் சத்தத்தை அதிகரித்து உறுமவிட்டதில்,

“இந்த இடம் எனக்கு… நீ வேறு இடம் பார்த்து செல்… [This is mine] ” என்பது போலவே இருந்தது அக்காட்சி…

இரு கார்களிலும் ஓட்டுநருக்கு அருகில் இருக்கும் பயணிகளின் இருக்கைகளில் அமர்ந்திருந்த பெண்கள் தங்கள் அருகில் அமர்ந்திருந்த ஆண்களின் பிடிவாதத்தைக் கண்டு சலித்துக் கொண்டவர்கள்,

“ஏங்க… இவ்வளவு பெரிய மால்ல நம்ம கார் நிறுத்துறதுக்கு வேற இடமா கிடைக்காது… அவங்க நிறுத்திட்டுப் போகட்டுமே… ” என்றதும் காரை செலுத்திக் கொண்டிருந்த ஆண்கள் இருவரும் சட்டென்று தங்களின் அருகில் அமர்ந்திருந்த பெண்களைக் கண்டு திரும்பிப் பார்க்கவும், விட்டுக் கொடுப்பதென்பது என் அகராதியிலேயே கிடையாது என்பது போல் இருந்தது அவர்கள் அணிந்திருந்த சன்கிளாசையும் மீறி தங்கள் பெண்களின் மீது வீசிய அவர்களின் பார்வையின் கூர்மையான வாள் வீச்சு….

சில நிமிடங்கள் கடந்தும் காரின் இஞ்சினை இவர்கள் இருவரும் அணைப்பது போல் தெரியாததாலும், வேறு பக்கம் செல்லும் உணர்வே இருவருக்குள்ளும் இருப்பதைப் போல் கடுகளவும் இல்லாததாலும், இரு கார்களிலும் அமர்ந்திருந்த இரு பெண்களுக்கும் “இவங்க திருந்தவே மாட்டாங்களா…” என்று சலிப்பாக இருந்தது…

தங்களின் மனைவிமார்களின் சலிப்புப் புரிந்தாலும், அவர்களின் எதிர்பார்ப்புத் தெரிந்தாலும், பொறுமையற்று புலம்பும் அவர்களின் மனதை உணர்ந்திருந்தாலும், சற்றும் இறங்கி வராது அவர்களைத் திரும்பிப் பார்த்த ஆண்கள் இருவரும் வலுவான ஆண்மைக் கலந்த அதரங்களை விரிக்காமல் மென் நகைப் பூத்தார்கள்…

தங்களவர்களின் உதடுகளில் தோன்றியிருந்த புன்னகையையும், முகத்தில் தெரிந்த கிண்டலையும், கண்களில் வழிந்து கொண்டிருக்கும் விஷமத்தையும், மீண்டும் மீண்டும் காரின் ஆக்ஸிலேட்டரை அழுத்தி காரை உறுமவிட்டுக் கொண்டிருந்த செய்கையையும் கண்ட பெண்கள், முகத்தைச் சுழித்துக் கொண்டவாறே, எதிரில் தங்களின் காரைப் பார்த்துச் சிங்கத்தைப் போன்றும், வேங்கையைப் போலும் கம்பீரமாக “நானும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..” என்பது போல் சீற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர்களைக் கண்டவர்களுக்கு இந்தப் போட்டி இன்று முடியாது என்பது போலவே இருந்தது…

இதில் எரிகிற நெருப்பில் எண்ணைய் ஊற்றுவது போல் இரு கார்களின் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண் பிள்ளைகளுக்குக் குதூகலம் தொற்றிக் கொண்டதில், தங்களின் அதரங்களை விரிக்காமலேயே நக்கல் சிரிப்புச் சிரித்தவர்கள், தங்களின் கூரிய வேல் முனையைப் போன்ற விழிகளை எதிரில் நிற்கும் காரின் மீதே நிலை நிறுத்தியவாறே,

“டாட்… நெவர் கிவ் அப் டாட்… [Dad… Never give up dad]… விட்டுக்கொடுத்துடாதீங்க… நாம் தான் ஃப்ர்ஸ்ட் வந்தோம்… எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை… நாம இங்க தான் பார்க் பண்ணனும்… அவங்க வேணா வேற எங்கேயாவது பார்க் செய்துக்கட்டும்…” என்று “தான்” என்ற வார்த்தைகளில் அழுத்தத்தைக் கொடுத்து கூறியதைக் கண்டு கடுப்புடன் பின் இருக்கையைத் திரும்பிப் பார்த்தார்கள் பெண்கள்..

“ஆமா… இப்ப இது ஒன்னு தான் குறைச்சல்… ஏற்கனவே எகிறிக்கிட்டு இருக்காரு… இதில எப்பப் பாரு அவருக்குத் தூபம் போட்டுக்கிட்டே… ” என்று முறைத்த பெண்களைக் கண்ட ஆண்கள் வாய்விட்டு சிரித்தவாறே…

“உனக்கு ஏண்டி இவ்வளவு கோபம் வருது? பசங்க அப்பா மாதிரி இருக்கிறதுல உனக்கு ஏன் இவ்வளவு பொறாமை?” என்றவர்களின் பார்வையில் இன்னமும் தங்களின் மனையாள்களின் மீதான அடங்காது திமிறி பொங்கும் காதலும், அவர்களின் மேல் முதல் நாள் பூத்திருந்ததைப் போன்று அதே அளவு அளப்பரிய நேசமும், என் வாழ்வில் நீ வந்த நிமிடமே பொன்னான நேரமடி என்று மனம் நெகிழ்ந்து களிகூறும் மகிழ்ச்சியும் வழிந்தவண்ணமே இருந்தது…

“டாட்… போதும் டாட்… லெட்ஸ் மூவ் [let’s move]… வேற எங்காவது பார்க் செய்யலாம்…” என்று தங்களின் அருகில் அமர்ந்திருந்த தங்கைகளைப் பின் இருக்கைகளில் இருந்த ஆண் பிள்ளைகள் முறைத்துப் பார்த்தார்கள் என்றால், காரின் ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் தங்களது ரியர் வியூ கண்ணாடியைத் தங்களின் பக்கம் லேசாகத் திருப்பிச் சிறு பெண்ணைப் பார்த்தவர்கள்,

“அம்மா மாதிரி பொண்ணு…” என்றார்கள் தங்களின் அழகிய வசீகரிப்பான சிரிப்பை உதிர்த்து…

இவர்களின் பார்வை பறிமாற்றங்களையும், விதண்டவாதங்களையும், போட்டிகளையும் பார்த்த பெண்கள் இருவரும் இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்று உணர்ந்து கதவைத் திறந்து கீழே இறங்க எத்தனித்த அந்த நிமிடத்தில் சரியாக அவர்களின் மறுபக்கம் ஒரு இடம் காலியானது…

“என்னங்க… இதோ இன்னொரு இடம் காலியாகிடுச்சு… இங்க பார்க் செய்யுங்க…” என்றவுடன் துள்ளிக் குதித்த அவர்களின் பிள்ளைகள் மீண்டும்,

“நோ டாட்… லெட் தெம் பார்க் தேர்… திஸ் இஸ் அவர் ஸ்பாட்…. [ Let them park there.. This is our spot] அங்க எங்க வேணா பார்க் செய்யட்டும்… இந்த இடம் நமக்குத் தான்…” எனவும் “ஐயோ!” என்றானது பெண்களிற்கு…

அவர்களின் முகத்தையும், அதில் தெரிந்தக் கலக்கத்தையும் கண்ட இரு ஆண்களும், இவ்வுலகத்தில் நீ ஒருத்தி சொல்வதைத் தவிர நான் வேறு ஒருவர் பேச்சையும் கேட்க மாட்டேன் என்பது போல் கனிந்தவர்கள்,

“சரி… உனக்காக மட்டும் தான்…” என்றவாறே தங்களின் காரை புதிய இடத்தில் நிறுத்துவதற்குத் திருப்ப, சொல்லி வைத்தார் போன்றே இருவரும் அந்த இடத்தை நோக்கி தங்களின் காரை திருப்பியிருந்தார்கள்…

அழுத்தமும், ஆணவமும், ஆக்ரோஷமும், அதிகாரமும் படைத்த இந்த இரண்டு மனிதர்களும் அடங்குவது, சில வருடங்களுக்கு முன் தங்களின் வாழ்வில் புயலெனத் திடுமெனப் புகுந்து, அழகிய காதலெனும் நுண்ணுணர்வால் இரு ஆண்களையும் தங்களின் இதயங்களுக்குள் இழுத்து கட்டி வைத்து, இன்று வரை “இவள் இல்லாமல் நானில்லை…” என்று தங்களின் உயிர்வரை கலக்கச் செய்து, காதலையும் கர்வத்தையும் போட்டிப் போட செய்ததில் காதலின் பாதத்தில் கர்வம் தோற்றுப் போய் மடிந்ததில், ஈருடலானாலும் நாங்கள் ஓருயிர் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் தங்களின் மலரினும் மெல்லிய மனையாளிடம் மட்டும் தான்…

ஆக இரு ஆண்களும் தங்களின் மனைவியிடம் கொண்டிருந்த காதலினால், நேசத்தினால் மட்டுமே தங்களின் பிடிவாதத்தை விட்டுக் கொடுத்துக் கர்வத்தில், அழுத்தத்தில், ஆணவத்தில் இருந்து சற்றே கீழ் இறங்கியிருக்கிறார்கள்…

ஆனால் இப்பொழுது மீண்டும் மறுபக்கம் இருக்கும் இடத்திற்கு முட்டி மோதிக் கொண்டு இருக்கும் காளைகளை என்ன செய்வது என்பது மீண்டும் அசந்து சலித்துப் போன மனைவிகள் தங்கள் தலையின் கை வக்க, மனைவியின் களைப்பும், அலுப்பும் தன்னையும் பாதிக்கின்றது என்பது போல் மீண்டும் தங்களின் வாகனத்தை முதலில் காலியாக இருந்த இடத்திற்கே திருப்ப, இரு கார்களும் ஒருங்கே திருப்பியதில், “அடராமா” என்று வாய்விட்டே புலம்பினார்கள் மனைவிமார்கள்…

“கிழிஞ்சுச்சு… நாம இப்ப கடைக்குப் போன மாதிரி தான்… சாமி நாங்க இந்த ஆட்டத்துக்கே வரலைப் பா…” என்றவாறே நிச்சயமாக இந்த முறை கதவை திறந்து இறங்கப் போகவும், தங்களின் நிலையில் இருந்து மேலும் கீழ் இறங்கி வந்த ஆண்கள் தங்களின் காரின் இண்டிக்கேட்டரைப் போட்டுத் தாங்கள் எந்த இடத்தில் நிறுத்தப் போகிறோம் என்று முன்னறிவிக்க, இடது பக்கத்தில் இருந்த இடத்தில் கருப்பு நிற பெண்ட்லி ப்ரூக்லேண்ட் [Bentley] திரும்பியது என்றால், வலது பக்கத்தில் இருந்த இடத்திற்குத் திரும்பியது சிகப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் [Rolls-Royce]…

ஒரு இடத்திற்குப் போட்டிப் போட்டுக் கொண்டு விலை உயர்ந்த கார்கள் இரண்டும் சீற்றத்துடனும், ஆங்காரத்துடனும் உறுமிக்கொண்டிருந்ததை ஆங்காங்கு நின்று ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த பொது மக்களுக்கு, நொடிக்கொரு தரம் யார் இவர்கள், காரை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் யார், கோடிகள் பெறும் இந்தக் கார்களின் உரிமையாளர்கள் யாராக இருப்பவர்கள் என்று வியப்பு மிஞ்சியதில் கண்களை அகல விரித்துப் பார்த்திருக்க, காரை நிறுத்தியதும் ஒரு சில நொடிகள் தாமதித்து ஒரு சேர கம்பீரமாக இறங்கிய ஆண்கள் இருவரையும் பார்த்த, கார் நிறுத்தும் வளாகத்தைச் சுற்றி இருந்த அனைவரும் ஆண்கள் உட்பட, அவர்களின் அழகில், கம்பீரத்தில் மயங்கித் தான் போனார்கள்…

ஆறு அடிகளுக்கு மேல் வளர்ந்து கவர்ச்சியாகவும் வசீகரமாகவும் காணும் பெண்கள் அனைவரையும் அடியோடு வீழ்த்தும் ஆளுமை கலந்த அழகோடு, செக்கச் சிவந்த மேனியுடன், உடற்பயிற்சியின் சிறப்பை பறைசாற்றுவது போல் பரந்துவிரிந்த மார்போடு, “என்ன பார்வைடா இது?” என்று காண்போர் அனைவரும் அதிசயித்து அதிரும் கூரிய வாள் வீச்சு போன்ற பார்வையும், வலிய சிவந்த அதரங்களின் மென் சிரிப்பும் என்று ஸ்ன்கிளாசை கழட்டியவாறே கம்பீரமாக இறங்கினர் கருப்பு நிற பெண்ட்லியில் இருந்து ஹர்ஷாவும், சிகப்பு நிற ரோல்ஸ் ராய்ஸில் இருந்து அர்ஜுனும்…..

இறங்கிய அந்த நொடியே இருவரும் ஒருவரை ஒருவரைக் கண்டு சற்று நேரத்திற்கு முன்பு நடந்ததில் எங்களுக்குத் துளியளவும் சம்பந்தமில்லை என்பது போல் புன் சிரிப்பு உதித்தவர்கள் ஒருவரை ஒருவர் நெருங்கி கரத்தைக் குலுக்குவதற்கு நீட்ட,

“ஹாய் மிஸ்டர் அர்ஜூன்… நைஸ் டு சீயூ அகெய்ன்… [Nice to see you again] ” என்று ஹர்ஷா தன் சிங்கத்தின் கம்பீரத்தோடு கூறினான் என்றால், “ஹாய் மிஸ்டர் ஹர்ஷா…. நைஸ் டு சீயூ யூ டூ… [Nice to see you too ] ” என்று சிறுத்தையின் கர்ஜ்ஜிதத்தோடு ஹர்ஷாவின் கரம் பற்றிக் குலுக்கினான் அர்ஜுன்…

எனது முந்தைய இரு நாவல்களையும் படிக்காதவர்களுக்கு இந்த இருவரையும் பற்றிய ஒரு சிறு அறிமுகம்…

ஹர்ஷா…. ஹர்ஷ வர்தன்… சி.எஸ் க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் சேர்மன் [C. S Group of Companies, Chariman, Harsha Vardhan]

நெடு நெடுவென்று ஆறு அடி இரண்டு அங்குலத்திற்கு உயரம்… சுண்டி விட்டால் இரத்தம் வரக்கூடிய அளவிற்குச் செக்கச்சிவந்த நிறம்…. அன்னைக்கும், தந்தைக்கும் உடன் பிறப்புகள் அல்லாததால் தாயின் வழியிலும், தந்தையின் வழியிலும் வந்த சொத்துக்கள் அனைத்துக்கும் ஒரே வாரிசு…

மும்பை மற்றும் சென்னை மாநகரங்களில் பெயர் சொல்லக்கூடிய பல கோடிகள் மதிப்புமிக்கத் தொழிற்சாலைகளை நடத்தி வந்து கொண்டிருந்த சிதம்பரம், சங்கீதா அவர்களின் ஒரே செல்ல மகன்… “பார்ன் வித் சில்வர் ஸ்பூன்” என்பது போல் இவனை “பார்ன் வித் கோல்டன் ஸ்பூன்” என்றே சொல்வார்கள்…

ஆதலால் மிகவும் அழுத்தமும், திமிரும், கர்வமும் அதனுடன் ஏகப்பட்ட பிடிவாதமும் என்று ஒருங்கே கொண்டவன்…. தன் வசீகரமான தோற்றத்தால் எதிர்படும் பெண்களை மயங்கச் செய்திருந்தாலும், தன் கூரிய விழிவீச்சில் தன் எதிராளிகளையும், தொழிற்களின் போட்டியாளர்களையும், தன்னை நெருங்க நினைக்கும் பகைவர்களையும் நடுநடுங்கச் செய்யும் சிங்கம்… தொழில் வட்டாரத்தில் தன் சொற்களுக்குப் படியாமல் எதிர்த்து நிற்பவர்களுக்கு இவன் ஒரு சிம்ம சொப்பனம்….

வாழ்க்கையில் ஒருவரிடமும் தலை வணங்காதவன்… தான் விரும்பியதை நினைத்த மாத்திரத்திலேயே அடக்கி தனக்கு உரிமையாக்கிக் கொண்டிருப்பதில் அதி புத்திசாலி…. விவரம் தெரிந்த நாளில் இருந்து யாரிடமும் பணிந்து போக விரும்பாதவன்… பணிவு என்ற சொல்லிற்கே அர்த்தம் தெரியாதவன்….

ஆனால் அவன் இறங்கி வருவது ஒருவரிடம் மட்டுமே…

எங்கிருந்தோ வந்து தன் விழிகளுக்குள் விழுந்த அந்த நொடியே தன்னை ஆன்மாவை அடித்து வீழ்த்தியவள், கடினமான இரும்பைப் போன்ற தன் இதயத்திற்குள் நுழைந்து தன்னைக் காதலென்ற புயலால் ஆட்டிப் படைத்தவள்….

தன் இயற்கை குணங்களான ஆங்காரத்தினாலும், பிடிவாதத்தினாலும் மிதமிஞ்சிய ஆத்திரத்தாலும் அவளை விட்டு இரண்டு ஆண்டுகள் பிரிந்து ஒவ்வொரு நிமிடமும், நொடியும் அவளை மறக்க இயலாமல் இன்னலுற்றுத் துடித்துத் தன் இதயத்தை வதைத்துக் கொண்டு இருந்தான் ஹர்ஷா…

பின் தன்னை மறக்கமுடியாது தவித்து அவள் உயிரையே மாய்த்துக் கொள்ளத் துணிந்து, மரணிக்கும் தருவாயில் இருந்த தன் காதலியை, தங்களின் தூய்மையான காதலின் பெயரில் இருந்த கழிவிரக்கத்தினால் மீட்டுக் கொடுத்த விதிக்கு நன்றி உரைத்து, தன்னவளின் உள்ளத்திற்குள், மென்மையான இதயத்திற்குள் பல போராட்டங்களிற்குப் பிறகு மீண்டும் நுழைந்தவன்…

மற்றவர்களுக்கு அஞ்சா நெஞ்சம் உடையவன் நான் என்று பறைசாற்றியிருந்தாலும், தன்னவளுக்காகத் தன் உயிரைக் கரங்களில் பிடித்துப் போராடி, ஆங்காரம், அதிகாரம், திமிர் அனைத்துக்கும் மேலான தன் கர்வத்தை அவளின் காலடியில் போட்டு வென்ற அவன் மனையாள், அவனுக்கும் மட்டுமே செல்லமாகக் கனி என்னும் கனிகாவிடம் மட்டுமே…

அர்ஜூன்… அர்ஜூன் கிருஷ்ணா…. எ.கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் சேர்மன்… [A. K Group of Companies, Chairman, Arjun Krishna]

வாட்டசாட்டமான ஆறு அடி மூன்று அங்குலத்திற்கு உயரம்… சிவப்பும் வெண்மையும் கலந்த அழகிய வசீகரிக்கும் நிறம்…. யாரையும் ஊடுருவி பார்க்கும் சக்தி வாய்ந்த வேங்கைப் புலியின் வேட்டையாடும் கண்கள்… அக்னி மலையின் தகிப்போடு நெருப்பு வீசும் அவனின் விபரீத பார்வையில் எதிராளிகள் நடுநடுங்கி போவார்கள்… அவனை எதிர்ப்பது அபாயம் என்று சொல்லாமல் சொல்லும் அவனின் ஈட்டியை விடக் கூர்மை வாய்ந்த விழிகள்… அவனின் வசீகரமான தோற்றமும், ஆளை அசரடிக்கும் ஆளுமையும், கலங்கடிக்கும் துணிவும் சுற்றி இருப்பவர்களைப் பிரமிக்க வைக்கும்… அவனிடம் தாள்பணிந்து அடி பணியச் செய்யும்…

தென்னிந்தியாவில் பல தொழிற்களை நடத்தி வந்த சக்திவாய்ந்த பெண்மணி ஸ்ரீ என்கிற ஸ்ரீவித்யாவிற்கும், பாலமுருகனிற்கும் பிறந்தது மூன்று பிள்ளைகள்…

இரண்டாவது மகன் அருண் கிருஷ்ணா, மனைவி தமயந்தியுடன் அமெரிக்காவில் வசிக்கின்றான்… அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் தங்களின் தொழில் கிளைகளைப் பார்த்துக் கொள்கின்றனர் இருவரும்…

மூன்றாவது மகள்… மஹா என்கிற மகாலெட்சுமி… அவளுடைய கணவன் வினோத், மும்பையில் இருக்கும் எ.கெ தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மை இயக்குனர்… இருவரும் மும்பையிலெயே வசிக்கின்றனர்…

ஸ்ரீவித்யாவிற்கும், பாலமுருகனிற்கும் பிறந்த மூன்று பிள்ளைகளில் தலைச்சன் பிள்ளை தான் அர்ஜுன்… அர்ஜுன் கிருஷ்ணா…

தன்னுடைய கடின உழைப்பாலும், தொழில் சாமார்த்தியத்தாலும், புத்திக் கூர்மையாலும், அடங்காத ஆளுமையாலும், உள்ளத்தினுள் ஊறிப் போயிருக்கும் அதிகாரத்தினாலேயும் தென்னிந்தியாவில் மட்டும் பிரபலமாகி இருந்த தங்களின் தொழிற்களை இந்தியா முழுவதும் பரப்பியது மட்டும் அல்லாது, வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யும் தொழிற்களிலும் முடிசூடா அரசனாகக் கோலோச்சி கொண்டிருப்பவன்…

தன் எதிராளிகளை ஒற்றைப் பார்வையாலேயே நடுநடுங்கி, கதிகலங்கச் செய்து புறமுதுகுக் காட்டி ஓடச் செய்யும் சிறுத்தைப் புலி…

ஆனால் இந்தப் புலியையும் அடக்கி ஆட்சி செய்து கொண்டு இருக்கும் ஒருவரும் உண்டு…

விவரம் தெரிந்த நாளில் இருந்தே தன் அருகே அமர்வோருக்கு கூட அந்தஸ்தும் தகுதியும் இருக்கிறதா என்று பார்க்கும் இவன், வாழ்க்கையில் முதன் முறை யார் என்றே தெரியாத, முன்பின் பார்த்து அறியாத, தன் தகுதிக்கும் அந்தஸ்திற்கும் வெகு குறைவான பெண்ணைத் தன் அன்னையின் கட்டளைக்குப் பணிந்து முகம் பார்க்காது மணந்தான்..

துவக்கத்தில் அவளை வெறுத்து ஒதுக்கி, பின் காதல் என்னும் நுண்ணுணர்வு தன் இதயத்தில் மொட்டாக அரும்பி மலராக மலர்ந்ததில் தன்னவளின் பால் ஈர்க்கப்பட்டு, தன்னவளாக அவளை ஏற்றுக் கொண்டு அவளுடன் ஈருடல் ஓருயிராக இணைந்த நாளில் இருந்து இன்று வரை, அவளின் பாதத்தில் மட்டும் தன் அகங்காரம், அதிகாரம், ஆளுமை அனைத்தையும் விட்டொழித்து, காதலால் கசிந்துருகி தனது உயிருனும் மேலாகப் பூஜிக்கும் தன் மலரினும் மெல்லிய மனையாளைத் தன் உள்ளங்கைகளில் தாங்கி போற்றிப் பாராட்டும், அவனுக்கு மட்டுமே செல்லமாகத் திவி எனும் திவ்யா…

ஹர்ஷா, அர்ஜுன், இரு சக்தி படைத்த ஆண்களுமே தங்களின் தனித்தன்மையான கர்வத்தையும், ஆளுமையையும், கோபத்தையும், ஆக்ரோஷத்தையும், உயர்வு மனப்பான்மையையும் தூர தள்ளிவைப்பது தங்களின் மனைவிகள் தங்கள் அருகில் இருக்கும் பொழுது தான்… மற்ற நேரங்களில் இவர்களை நெருங்குவதற்கு இவர்கள் இருவரைத் தவிர வேறு ஒருவரும் பிறக்கவில்லை…

எ.கெ க்ரூப் ஆஃப் கம்பெனிஸ்! சி.எஸ் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ்!

இரு குழுமங்களும் பல்வேறு தொழிற்களைச் செய்து கொண்டிருந்தாலும், நாட்டின் மொத்த தொழில்துறை முதலீடுகளில் கிட்டத்தட்ட 31.5 சதவிகிதத்தைக் கொண்டுள்ளதாலும், மற்றும் அயல் நாட்டு இணைவாக்கத்தின் 69 சதவீத பங்கு உள்ள பொறியியல் துறை மிகுந்த உழைப்பை உள்வாங்கிக் கொண்டிருந்தாலும், அதற்கிணையாகப் பெரும் வருமானத்தையும், இலாபத்தையும் ஈட்டும் இந்தத் துறை தொழிலே இவர்களின் முதன்மையான வணிகம்…

மோட்டார் வாகனங்கள், டீசல் என்ஜின்கள், டிராக்டர்கள், மிதிவண்டிகள், மோட்டார் சுழற்சிகள் போன்றவைகளுக்கு முக்கிய மற்றும் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்து இந்தியாவிற்குள் விற்பனை செய்வது மட்டும் அல்லாது, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது இவர்கள் இருவரின் குழுமங்களும்…

அது மட்டும் அல்லாது இந்தியா முழுவதிலும் ஸ்கைஸ்க்ரேப்பர் எனப்படும் உயரமான கட்டிடங்களையும், மிகப்பெரிய அடுக்குமாடிக் கட்டிடங்களையும், வணிக வளாகங்களையும், ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர ஹோட்டல்களையும் கட்டுவதிலும் கோலோச்சி கொண்டிருப்பவர்கள் எ.கெ மற்றும் சி.எஸ் கம்பெனிஸ்…

மூன்றாவதாக வெளிநாட்டில் உற்பத்தியாகும் வணிக ரீதி அல்லாத, உயர்தர, விலை உயர்ந்த, ஆடம்பர (luxurious) கார்கள், எஸ்.யூ.விகள் மற்றும் ட்ரக்குளை இந்தியாவிற்கும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்தது அர்ஜுன் மற்றும் ஹர்ஷாவின் நிறுவனங்கள்…

இவை அனைத்தும் தானாக ஏற்பட்டதா அல்லது விதியின் விளையாட்டுக்களில் இவையும் ஒன்றா என்றே புரியாதது போல், இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் தொழிற்களிலும், அதற்கு இணையாகப் பெரும் உழைப்பையும் உள்வாங்கிக் கொள்ளும், போட்டிகளையும், எதிரிகளையும், சிறிது கண் அசந்தாலும் கடுமையான, மீண்டும் எழ முடியாத நஷ்டங்களையும் கொண்டு வரும் தோழிற்களையும் ஒத்ததைப் போன்று செய்து கோலோச்சி கொண்டிருக்கும் இந்த இரு நிறுவனங்களுமே தொழில் போட்டியாளர்கள் [competitors] ஆகிப் போனார்கள்…

என்று ஹர்ஷா சி. எஸ் க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் நிர்வாக இயக்குனர் ஆகப் பொறுப்பேற்றானோ அன்றில் இருந்து அர்ஜுன் அவர்களின் தொழில் எதிரியாகிப் போனான்…

இருவரும் ஒருவரை ஒருவர் தொழில் ரீதியாக அடித்து வீழ்த்திக் கொள்ளவும், ஒரு தொழிலகத்தில் [industries] எ.கெ கம்பெனிஸ் முதன்மை இடம் பெற்றால், சி.எஸ் கம்பெனிஸ் இரண்டாவது இடமும், இன்னொரு தொழிலகத்தில் சி.எஸ் கம்பெனிஸ் முதன்மை இடம் பெற்றால், எ.கெ கம்பெனிஸ் இரண்டாவது இடமும் என்று மாற்றி மாற்றி வெற்றிப் பெற்றுக் கொண்டிருக்கவும், இரு கம்பெனிகளும் பல தொழிலகங்களைக் கொண்டிருந்தாலும், பொறியியல் துறை, கட்டுமானத் துறை, மற்றும் பாகங்கள் உற்பத்தி துறைகளில், இவர்கள் இருவருக்கும் இவர்களேப் மிகத் தீவிரமான போட்டியாளர்களாக மாறிப் போனது விதியின் விளையாட்டுகளில் ஒன்றே…

ஆக ஒவ்வொரு நாளும் விடிவது இவர்களுக்குத் தங்களின் தொழிற்களைப் பெருக்கிக் கொள்வது மட்டும் அல்ல, போட்டியாளரின் திட்டங்களைக் கண்டறிவது, தொழிற்களில் அவன் விளையாடும் விளையாட்டுக்களை எச்சரிக்கையுடன் கனிப்பது, ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடுவதில் தங்களின் சாமர்த்தியத்தை, புத்திசாலித்தனத்தை, சாதுர்யத்தை வெறியோடு உபயோகப் படுத்துவதில் தான்…

ஆனால் அர்ஜுனிற்கும் ஹர்ஷாவிற்கும் இடையில் இருந்தது, இருந்து கொண்டிருப்பது ஆரோக்கியமான போட்டி…

என்ன தான் தொழிற்களில் போட்டியாளர்களாக இருந்தாலும் இவர்களுக்கு இடையில் வன்மம் என்பது துளி அளவும் இல்லை…

ஓட்டப் பந்தயத்தில் வெற்றியை எட்டும் நேரத்தில் தனக்கு அடுத்து வருபவன் தன்னை வென்றுவிடாமல் இருக்க முன்பை விட அதி வேகமாக ஓடி அவனை வெற்றி பெருவதில் காட்டும் வெறியே இவர்களின் தொழில் பந்தயத்திலும் இருந்தது…

இவர்கள் எதிரிகள் அல்ல… தர்மத்தின் வழியே இவர்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்திக் கொள்ள முயற்சித்தார்கள்… தங்களுடன் ஆரோக்கியமாகப் போட்டியிடுபவர்களைப் போட்டியாளர்களாக நினைப்பதை விடத் தொழிற்துறை சகவாதிகளாகத் தான் நினைத்தார்கள்… அதே சமயம் இருவரும் ஒருவருக்கொருவர் எந்தச் சந்தர்பங்களிலும் விட்டுக் கொடுத்ததில்லை…

ஆக இவர்கள் இருவரும் எதிரிகளும் அல்ல, நண்பர்களும் அல்ல…

ஆனால் இவர்களுக்குப் பிறந்த இவர்களின் ஆண் வாரிசுகள் இவர்களுக்குள் இருக்கும் தொழில் போட்டிகளில் தங்களின் தந்தைகளைப் பின்பற்றுவார்களா?

தந்தை வழி தனயன் வழியா? அல்லது என் வழி தனி வழியா?

தர்மத்தின் வழி செல்வார்களா? அல்லது அதர்மத்தின் வழியைப் பின்பற்றுவார்களா?

சற்று நேரத்திற்கு முன் தங்களின் கணவர்கள் செய்து கொண்டிருந்த அழிச்சாட்டியத்தை மறந்து இப்பொழுது ஒருவருக்கு ஒருவர் நட்பாகப் புன்னகைத்துப் பேசிக் கொண்டிருப்பதை உலகத்தின் எட்டாவது அதிசயமாகக் கண்டு விழிவிரியப் பார்த்திருந்த திவ்யாவும், கனிகாவும் நெருங்கி இரு கரங்களைக் கூப்பி வணக்கம் செய்ய, அதுவரை எதிரியை எதிரியாக நினையாது புன்சிரிப்போடு பேசிக் கொண்டிருக்கும் தந்தையையும், திருமணம் ஆன நாளில் இருந்தே கணவர்களின் மூலமாக இந்த இரு நிறுவனங்களுக்கு இடையில் இருக்கும் தீராத போட்டிகளைக் கேள்விப்பட்டிருந்தும் முகத்தில் கனிவோடு வணக்கம் சொல்லும் அன்னையையும் கண்டு உள்ளமும், புத்தியும் ஏற்றுக்கொள்ள இயலாது எரிச்சலில், கடுப்பில் முகத்தைச் சுழித்தவண்ணம் காருக்குள்ளே அமர்ந்திருந்த அண்ணன்களை வழக்கம் போல் ஒரு நொடி அதிசயித்துப் பார்த்துவிட்டு காரை விட்டு கீழிறங்கினார்கள் தேவதையென, செப்புச் சிலையென, வானை கிழித்துக் கொண்டு இறங்கும் மின்னலென வசீகரிக்கும் அழகு மங்கைகள் ரதி வர்தன், அஷ்வினி கிருஷ்ணா மற்றும் ரோஹினி கிருஷ்ணா…

ரதி வர்தன்…. ஹர்ஷ வர்தன், கனிகாவின் தவப் புதல்வி…. அன்னை கனிகாவின் களையான முகத்தையும், தந்தை ஹர்ஷாவின் நிறத்தையும் கலந்த, இரத்தினக்கல் காலை வெயிலில் பிரகாசிப்பது போன்ற சிவந்த நிறமும், எந்த ஆபரணமும் இன்றியே தந்தச் சிலையென ஜொலிக்கும் சுந்தர முகமும், பங்கய விழிகளில் எந்நேரமும் வழியும் விஷமச் சிரிப்பின் சாயை முகத்திலும் விரிந்து மலர, எழிலுக்கு இலக்கணம் வகுக்கவே பிறந்தது போல் பிறந்திருந்தாள் பேரழகி… அஜந்தா எல்லோர குகைகளில் தீட்டப்பட்டிருக்கும் அழகு ஓவியப் பாவையைப் போன்ற செப்புக்காவியம் ரதி… ஒன்பது வயது…..

அஷ்வினி கிருஷ்ணா…. அர்ஜூன் கிருஷ்ணா, திவ்யாவின் தவப்புதல்வி… தந்தையின் வசீகரிக்கும் கவர்ச்சியான அழகு உருவத்தையும், அன்னையின் கனிவான பயந்த சுபாவத்தையும் குழலிசைக் குரலையும் ஒருங்கே இணைந்து பிறந்திருக்கும் அழகுத் தேவதை…. வெண்ணிற சந்திர பிம்ப முகத்தில் வளைந்துக் கிடந்த புருவங்களும், சாந்தமும், கனிவும், அதனுடன் மானின் மிரட்சியும் ஒருங்கே இழையும் கண்களும், எடுப்பான நாசியும், கன்னங்களின் லேசான புடைப்பும், பவளத்தை இழைத்தது போன்ற சிவந்திருந்த அதரங்களில் பூத்திருக்கும் வெட்கச்சிரிப்பும், கண்டவர் உள்ளத்தைக் கணப்பொழுதில் கொள்ளை கொண்டு அவர்களைச் சிலையென ஸ்தம்பித்து விடச் செய்யும் பேரெழில் வாய்ந்த காரிகையாகத் தோன்றிய சித்திரம் அஷ்வினி…. ஒன்பது வயது….

ரோஹினி கிருஷ்ணா… அர்ஜூன் கிருஷ்ணாவின் தம்பி அருண் கிருஷ்ணா, தமயந்தியின் தவப்புதல்வி…. தந்தையின் குறும்புத் தனத்தையும், கனிவான குனத்தையும் அன்னையின் பேரழகையும் கலந்து பிறந்திருக்கும் வாயாடிச் சுட்டிப் பெண்…. கோவைக்கனி நிறத்தை பெற்ற இதழில் சதா குறும்புப் புன்னகைத் தவழ, காந்தம் போல் காண்பவரின் கண்களோடு உள்ளத்தையும் கவர்ந்து இழுக்கும் துறுதுறு விழிகளும், மாம்பழ கன்னத்தில் குறும்புச் சிரிப்புக் காரணமாகப் பாயும் ரத்தச் சிவப்பும் என்று வசீகர அம்சங்கள் நிறைந்த முகத்தையுடைய வர்ணச் சித்திரம் ஒன்று உயிர்பெற்று வந்துவிட்ட மாயையை உருவாக்கும் பேரழகு வாய்ந்த ரவிவர்மனின் ஓவியம் ரோஹினி… ஏழு வயது….

சிறு பெண்கள் மூவரும் காரை விட்டு இறங்க ஒரே வயதை ஒத்த ரதி வர்தனும், அஷ்வினி கிருஷ்ணாவும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிய புன்னகையை வீசிக் கொள்ள, அஷ்வினியை பின் தொடர்ந்து இறங்கிய ரோஹினி கிருஷ்ணா தமக்கையின் அருகில் சென்றவள் அவள் கரங்களுக்குள் தன் விரல்களை நுழைத்தவாறே ரதியை பார்த்து தன் குறும்பு நகையை உதிர்த்தாள்…

அர்ஜுனின் மனையாள் திவ்யாவிற்கு அருகில் நின்ற அஷ்வினியையும், ரோஹினியையும் பார்த்து அவர்களின் அழகில் வியந்து ஹர்ஷா புன்னகைத்தான் என்றால், ஹர்ஷாவின் மனைவி கனிகாவிற்கு அருகில் நின்ற ரதியின் பேரழகைக் கண்டு அர்ஜுன் மெய்மறக்க, காரில் இருந்து பெண்களும், பெண் குழந்தைகளும் இறங்கிய பிறகும் இறங்காது பிடிவாதமாகவும், கோபத்துடனும் அமர்ந்திருந்த ஆண் பிள்ளைகளை அவர்களின் அன்னைகள் திரும்பிப் பார்த்தார்கள்…

அந்த நேரம்….

வானைத் தொடும் அளவிற்கு வளர்ந்து இருக்கும் மலையின் மேல் ஓங்கி உயர்ந்தும், படர்ந்து விரிந்தும், அடர்ந்த விருட்ஷங்களையும், செடிகொடிகளையும், புதர்களையும் கொண்டு இருக்கும் காட்டின் இதயத்திற்குள், கருப்பு போர்வைப் போல் போர்த்தியிருக்கும் இருளை சுமந்து, பார்க்கும் யாவரையும் தண்டு வடம் சில்லிட செய்யும், அமைதி சூழ்ந்திருக்கும் புதர்களுக்கு இடையில் இருந்து ஓசைப் படாமல், அரவம் ஏதும் இல்லாமல் தன் இரையை வேட்டையாட வெறியோடு பதுங்கியிருக்கும், உறுமும் இரட்டைச் சிங்கங்களும், வேங்கைப் புலியும், கரிய இருட்டிலும் பளபளக்கும் கண்களோடு மெள்ள அடியெடுத்து வெளிவரும் நேரம்….

கானகத்தில் இருந்து, தங்களின் பதுங்கிடத்திலிருந்து தன் பலியை ஒரே அடியில் கொன்று சாய்க்கும் வேட்கையின் வெறியோடு வெளிப்படும் அந்த நொடி எதனைப் போன்ற ஒரு சூழ்நிலையை அங்கு நிலவிக்கச் செய்யும்….

அந்தப் பயங்கரச் சூழ்நிலையையே அங்கு விளங்கியது அம்மூவரும் தங்களின் காரில் இருந்து இறங்கிய அந்த நொடி….

அபிமன்யு கிருஷ்ணா…. பதிமூன்று வயது…

ஆதித்ய வர்தன்…. பன்னிரெண்டு வயது

அபிஷேக் வர்தன்….. பன்னிரெண்டு வயது

குருஷேத்திரம்!

போர் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *