உதயேந்திர வர்மன்.. Teaser…

“நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராயக் கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,
திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்.

பொருள்: சூரியனை (உதயன்) சுற்றி வரும் கோள்களைப் போல அவ்வீரனை எதிரிகள் அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர்… ஆனால் கோள்கள் அனைத்துக்குமே தலைவன் என்று பெயர் எடுத்திருக்கும் ஞாயிறாகிய இம்மாவீரன் ஒருவனே, தனது அசாத்திய தீரத்தினாலும், வலிமையினாலும், அபாயகரமான வீரத்தினாலும் அனைவரையும் வென்றுவிடுகின்றான்.

*********

நகரின் தெருக்களையும் சாலைகளையும் சாரைசாரையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டங்கள் மெல்ல களையத் துவங்க, கோவில்களில் ஏகச்சிறப்புடன் நடந்து கொண்டிருந்த வழிபாடுகளும் முடிவடையும் நேரத்தை நெருங்கவும், நகர்வீதியில் மும்முரமாய்ப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரிகளும் விற்பனைகளை முடித்து, மீதம் இருக்கும் பொருட்களைத் தங்களின் துணிமூட்டைகளில் கட்டிக்கொண்டு களையத் துவங்கினர்.

பிரதான வீதிகளின் இரு பக்கங்களும் அமர்ந்து கொண்டு தின்பண்டங்களைக் கூவி விற்கும் தெரு விற்பனையாளர்களும் உறங்க துவங்க, பேரிரிசைச்சலோடு கரையை மோதி பின் திரும்பும் அலைகளும் நித்திரையில் ஆழச் சென்றதைப் போல் ஊரடங்கிப் போக, தங்களின் இல்லக் கதவை மகளிர் அடைக்க முற்படும், நடுச்சாமம் துவங்குவதற்கு அரை முகூர்த்தம் உள்ள இரவு வேளை.

முன்பனிக்காலத்தின் சீந்தக்காற்று, ஆகாயம் எட்டும் உயரத்திற்கு அடர்ந்து வளர்ந்திருக்கும் விருட்சங்களைக் கொண்ட செவ்வண்ண மலைச்சரிவைத் தாலாட்டிப் பாட்டுப்பாடிச் செல்ல, தென்றலின் தீண்டலினால் அசைந்த செடிகளின் அசைவும், கவிழ்ந்து கிடக்கும் மரக்கிளைகளின் சரசர சப்தமும், வானத்தை மறைப்பது போல் அடைத்து நிற்கும் மரங்களின் இலை தழைகளின் சலசலப்பும், காண்போரின் கண்களில் இருந்து தன்னை மறைத்துத் திரியும் திருடனைப் போன்று நிலத்தை மறைத்து நிற்கும் புதர்களின் உரசல் சப்தமும், நடுச்சாமம் துவங்கிக் கொண்டிருக்கும் அவ்விரவை அதி பயங்கரமாகக் காட்டத் துவங்கியது.

செவ்வண்ண மலையினில் இயல்பாயமைந்த நீர் சுனையின் அருகே ஆங்காங்கு தாழை மரப்புதர்களின் உச்சியில் மலர்ந்து, வெளியெங்கும் மணத்தைப் பரப்பும் தாழம்பூவின் வாசமும், ஆண்மலரின் மகரந்த பைகளுக்குள் புதைந்திருக்கும் மகரந்த துகள்கள், பெண்மலர்களின் சூலகத்திற்குள் விழுந்து, மகரந்த சேர்க்கையினால் விளையும் மனோரஞ்சித மலர்களின் நறுமணமும், இரவில் வண்டுகளுக்குத் தனது இருப்பிடத்தைக் காட்டவே வெண்மை நிறத்தினைப் போர்த்தியிருக்கும் அழகில் இணையில்லாத பாரிஜாத பூக்களின் வாசனையும், எட்டுத்திக்கும் பரவி இணையற்ற இன்பச் சூழ்நிலையை விளைவித்துக் கொண்டிருந்தன.

ஆயினும், சிதறாத கவனத்துடனும், சர்வத்தையும் ஊடுருவி நோக்கும் ஆழ்ந்த கூரிய தன் ஈட்டி முனை விழிகளால் நான்கு பங்கங்களையும் துளைத்தெடுத்தவாறே புரவியின் மீதமர்ந்து, மிதமான வேகத்துடன் சென்று கொண்டிருந்த அந்த இளைஞனின் மனதிலோ, சிறிதளவும் இன்பம் விளையவில்லை.

காரிருள் எங்கும் கவிழ்ந்து உயர்ந்து நிற்கும் மரங்களை ராட்ஷசனைப் போன்று காட்சியளிக்கச் செய்ய, சந்திரனில்லாத வான் வெளியில் ஒன்றிரண்டாய் நட்சத்திரங்கள் அங்கும் இங்கும் மிணுமிணுக்க, செங்குத்தாகக் கண்ணுக்கெட்டிய தூரம்வரை வளர்ந்திருந்த சவுக்கு மரங்களின் உயரம் காண்போர் அனைவருக்குமே பீதியைக் கிளப்பினாலும்,

புரவியின் குளம்புகளில் பட்டுத்தெறித்த இலைகளின் ஒலியைத் தவிர விசித்திரமான ஒலியை எதிர்பார்த்திருப்பது போல் செவிகளைக் கூர்மையாக்கி சென்று கொண்டிருந்தவனின் இதயத்தில், அச்சமென்பதே இல்லை என்பதை அவனின் தெளிவான முகமே தெள்ளத்தெளிவாகப் பறைசாற்றியது.

நிதானமான வேகத்திலும், அமைதியான வதனத்தோடும் குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்த அவ்விளைஞன் நடுச்சாமம் கடந்து ஒரு நாழிகை ஆன நேரத்தில், ஏறக்குறைய செவ்வண்ண மலையைச் சூழ்ந்திருக்கும் கானகத்தின் மையப்பகுதியை அடைந்த வேளையில், திடுமெனக் கேட்ட மெல்லிய சலசலப்புச் சப்தத்தில் விருட்டென்று கடிவாளக் கயிற்றைப் பிடித்து இழுத்து தனது குதிரையை நிறுத்தினான்.

“பைரவா.. எனக்குக் கேட்பது உனக்கும் கேட்கிறதா?”

கிசுகிசுப்பான சாரீரத்தில் பேசினாலும், அவனின் குரலில் வழிந்து கொண்டிருக்கும் ஆளுமையும், அதன் தொனியில் படிந்திருக்கும் கம்பீரமும் பைரவனை மயக்கியது போன்று நண்பனின் கேள்விக்கு ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தது, அக்குதிரை…

மிகவும் வளர்ந்த தசையுடனும் சக்திவாய்ந்த எலும்புகள் மற்றும் பரந்த மார்புடன் கூடிய கோஹிலன் வகையைச் சார்ந்த அரபுக் குதிரையையும், அதிகப் பிரபுத்துவத் தோற்றத்தை உடைய சிக்ளவி வகையைச் சார்ந்த அரபுக் குதிரையையும் இணைத்த கலவையான, மகத்தான வடிவங்களுடனான அசாதாரணமான அழகும், கவர்ச்சியும், முக்கிய அம்சமாக நட்பிற்கும் நம்பிக்கைக்கும் பெயர் பெற்ற, ஒரு நாளில் 160 கி.மீ க்கும் அதிகமாகக் கடக்கும் திறன் பெற்ற, கொஹாலன் வகையைச் சார்ந்த பளீர் வெந்நிற உயர் ஜாதி அரேபியக் குதிரை.

விநாடிகள் நேரம் தாமதித்தவன் பின் திடமான நெஞ்சத்துடன் முகத்திலும் உறுதித் துலங்க, ஒரே தாவில் புரவியை விட்டுக் குதித்துக் கீழிறிங்கிய நொடியே தன்னை நிலை நிறுத்த, இம்மி அளவுக்கூடப் போராடாது நீண்ட வலியக் கால்களைத் தரையில் அழுத்தமாக ஊன்றியவன் பைரவனின் முதுகில் தடவிக் கொடுத்தவாறே,

“நாம் தேடி வந்தவர்கள் இங்குத் தான் அருகில் இருக்க வேண்டும்.. நம் வேட்டை இன்னும் சில மணித்துளிகளில் துவங்க இருக்கிறது பைரவா.. எனது அழைப்பைக் கேட்கும் வரை நீ மறைந்து நில்..” எனவும்,

நண்பனின் கட்டளையை உணர்ந்து கொண்டது போல் சப்தமிடாது அடி மேல் அடி எடுத்து வைத்து, காரிருளை போர்வையெனப் போர்த்தியிருந்த அடர்ந்த மரங்களுக்கிடையில் மறைந்து போனது அக்குதிரை.

காய்ந்து உதிர்ந்திருக்கும் சருகுகளின் சப்தம் கூட வெளிவராது அரவமின்றி நடந்து சென்றவன், நிசப்தத்தில் மூழ்கியிருந்த காட்டிற்குள் அவ்வப்பொழுது கேட்டுக்கொண்டிருக்கும் புலிகளின் உறுமல்களுக்கும், ஓநாய்களின் ஊளைகளுக்கும், சர்ப்பங்களின் ஊர்தலிற்கும் அஞ்சாது,

இடைக்கச்சையில் சொருகியிருக்கும் குறுவாளை இடது கை பழக்கம் உடையவனாதலால், தனது இடது கரத்தால் இலகுவாகப் பிடித்தவாறே நடையைத் தொடர, சிறிது தொலைவில் கானகத்தின் இதயப் பகுதியில் சுடர்விட்டுப் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த தீயைக் கண்டதும், இளைஞனின் உரமேறிய கால்கள் சட்டென்று தனது நடையை நிறுத்தியது.

மரக்கட்டைகளையும், குச்சிகளையும், காய்ந்த சருகுகளையும் ஒருங்கிணைத்து அதனில் நெருப்பு மூட்டியிருந்ததில் சில அடிகள் தூரத்தில் தெறித்துக் கொண்டிருந்த எரி நெருப்பின் துகள்கள் பலபக்கங்களிலும் சிதறிக் கொண்டிருக்க, அதனருகே மனிதர்கள் ஒருவரும் இல்லாததும், அனாதையாய் அக்காட்டினுள் பளபளத்துக் கொண்டிருக்கும் சுடரொளியும், தான் எதிர்பார்த்த இடத்தை அடைந்துவிட்டோம் என்பதனை அவ்விளைஞனிற்கு வலியுறுத்தியது.

தனது வலிய உதடுகளில் மெல்லிய புன்முறுவலை சிந்தியவன் வார்த்தைகள் ஒன்றையும் உதிர்க்காது, திரும்பியும் பாராது எரிந்து கொண்டிருக்கும் தீயை நெருங்கியவன் அதனருகில் அமர, குளிர்காய முற்படுபவன் போல் இரு கரங்களையும் அவ்வப்பொழுது சுடரொளிக்கு முன் நீட்டுவதும் பின் முகத்தின் மீது வைத்துக் கொள்வதுமாக அமர்ந்திருக்க, பல மணித்துளிகள் கடந்தும் மயான அமைதியே நிலவிய அக்கானகத்தினுள் நெடு நேரம் சென்று சிறு சலசலப்புக் கேட்டது.

தனக்குச் சில அடிகள் தொலைவில் கேட்கும் சப்தத்தை இளைஞனின் செவிகள் ஆழ உள்ளிழுத்துக் கொண்டும், முதுகிற்குப் பின்னால் கேட்கும் நுண்ணிய ஓசையை அவனது புத்தி கிரகித்துக் கொண்டும், தனது மயிற்கால்கள் கூட அசையாது வெகு அமைதியாக அமர்ந்திருந்தவனின் விழிகளில் திடுமெனப் பாய்ந்த வேலின் நுனிக்கூர்மையைக் கண்ட,

அவனது முகத்தை நோக்கி தனது சுவாலையின் கரங்களை அசைத்துக் கொண்டிருந்த அக்னி குழம்புக் கூட விருட்டென்று தனது திசையை மாற்றியது.

புத்தியும் புலன்களும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதைப் போல் சகலத்தையும் கணக்கிட்டுக் கொண்டிருந்தவாறே, மௌனமே மொழியாய் அமர்ந்திருந்த இளைஞனின் பார்வையின் வீச்சை அவனுக்குப் பின்னால் மூன்று புறங்களிலும் இருளோடு இருளாகக் கலந்து மறைவாய் நின்றிருந்த ஐவரும் கண்டிருந்தனரென்றால், இன்னும் சில நிமிடங்களில் நடக்கப் போகும் கொடூரத்தை உணர்ந்து காரிருளில் மறைந்துப் போயிருப்பனரோ?

*******

இளைஞனிற்குப் பின்னால் மெல்ல அடிமேல் அடி எடுத்து வைத்தவாறே வந்து கொண்டிருந்தவர்களின் காலடி ஓசை திடுமென நின்றுவிடவும், இதழ்களை விரிக்காது அழகிய இளநகையைச் சிந்தியவன், தனது ஆளுமையும், கம்பீரத்துடன் அதிகாரமும் கலந்த குரலில் கணீரென்று கூறினான்.

“நீங்கள் ஐவர்.. அதில் இருவர் குறைந்தது ஆறடிகள் உயரமேனும் இருக்கவேண்டும்.. நல்ல ஆஜானுபாகுவான உடல்வாகும் உடையவர்கள் நீங்கள் இருவரும்.. மற்றும் இருவர் ஆறடிகளுக்குக் குறைந்தவர்கள்.. உடலில் பருமன் இல்லாவிட்டாலும், எதிராளிகளை விநாடிகளில் தூக்கி எறியக் கூடிய வலிமையான உடலைக் கொண்டவர்கள்.. “

இரண்டு விநாடிகள் தனது பேச்சை நிறுத்தியவன், அதுவரை தவழ்ந்திருந்த மெல்லிய நகையை மேலும் விரிவுப்படுத்தும் விருப்பம் கொண்டது போல் உதடுகளை நன்றாக விரித்துப் புன்னகைத்தவாறே தொடர்ந்தான்.

“மீதம் இருக்கும் ஒருவர்.. பெண்.. அதுவும் இளம்பெண்..”

தங்களைத் திரும்பி பாராமலேயே சப்தங்களை வைத்தும், தங்கள் உடல் மொழிகளை வைத்தும் கணிப்பவனின் திறமையில் பிரமித்துப் போனார்கள் ஐவரும்.

“நாங்கள் ஐவர் என்று எங்களைக் காணாமலேயே உன்னால் எவ்வாறு கண்டுப்பிடிக்க முடிந்தது? எங்களை மறைந்திருந்து வேவு பார்த்தாயா? இல்லை உனக்கு முன் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எங்களின் பிம்பங்களைக் கண்டாயா?”

ஏளனமும் விஷமமும், அத்துடன் சரி சமமாக எச்சரிக்கையையும் கலந்து கூறிய ஐவரில் ஒருவன் மெல்ல இளைஞனை நெருங்க, அப்பொழுதும் அவர்களைத் திரும்பியும் பாராது தீச்சுடரின் மீதே தன் ஆழ்ந்து ஆராயும் பருந்து விழிகளைச் செலுத்தியிருந்தவன், சிறிதே உரத்தக் குரலில் சிரித்தான்.

“வேவு பார்ப்பதற்கு நான் ஒற்றனும் அல்ல, எனக்கு எதிரில் ஒளிர்ந்து கொண்டிருப்பது கண்ணாடியும் அல்ல.. விழிகளைத் திருப்பாது உங்களைக் கணக்கிடுவதற்கு உங்களின் பிரதிபலிப்பும் எனக்குத் தேவையல்ல…”

****************

“நீங்கள் யார்? இந்நேரத்தில் இந்த நடுக்காட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அதுவும் தன்னந்தனியாக?”

இளைஞனின் அருகில் அமர்ந்தவர்களில் தன் வினாவைத் தொடுத்தான் ஆறடிகள் உயரம் கொண்டவன்.

“நான் ஒரு வழிப்போக்கன்… நெருப்பைப் பார்த்ததும் எவரும் இருப்பார்கள் என்று தேடி வந்தேன்.. ஒருவரையும் காணாது குளிர் காய்ந்துவிட்டுப் போகலாமே என்று அமர்ந்தேன்.. நீங்க யார்? அதுவும் ஒரு பெ..” என்று எதுவோ கூற வாயெடுத்தவன் சட்டென்று தனது பேச்சை மாற்றி,

“இந்நேரத்தில் இந்தக் கானகத்தில் உங்களுக்கு என்ன வேலை? நீங்களும் என்னைப் போல் தானா? அதாவது வழிப்போக்கர்களா?” என்று முடித்தான்.

“இல்லை, இங்கு அருகிலுள்ள ஊர் ஒன்றில் எங்களுக்குச் சிறு வேலை இருக்கின்றது.. செவ்வண்ண மலையைச் சுற்றி சென்றால் அவ்வூரை அடைவதற்கு வாரங்கள் பல எடுக்கும் என்று கேள்விப்பட்டோம்… ஆனால் செவ்வண்ண மலை வழியாக இக்காட்டைத் தாண்டிப் போனால் நான்கே நாட்களில் சென்று விடலாம் என்றும் கூறினார்கள்.. ஆகையால் தான் இவ்வழியைத் தேர்ந்தெடுத்தோம்..”

அவன் பொய்யுரைப்பதை அவனது விழிகளின் மொழிகளாலேயே கண்டுணர்ந்து கொண்ட இளைஞன் ஆறடி மனிதனின் பதிலில் வியப்புற்றதைப் போல் புருவங்களை மட்டும் லேசாக உயர்த்தியவன், அவனது கூற்றை ஆமோதிப்பதைப் போன்று தலையை அசைத்து,

“ஆனால் இது பெண்களுக்குப் பாதுகாப்பான வழியல்லவே?” என்றான், ஒரு முறை அப்பெண்ணின் மீது தனது பார்வையைப் படியச் செய்து.

இளைஞனின் வார்த்தைகளில் கொதித்தெழுந்தவள் முகத்தில் எரிச்சல் கலந்த வெறுப்பைக் கொணர்ந்து,

“ஏன் பெண்களென்றால் என்ன? பெண்களால் தங்களைப் பாதுகாக்க கொள்ள முடியாதா? எங்களால் இக்காட்டினை தனியாக இரவு நேரத்தில் கடக்க இயலாதா?” என்று வெடித்தாள் கோபமும் சீற்றமும் தெறிக்கும் குரலில்.

அவளின் ஆங்காரத்தையும், இறுமாப்பையும், வதனத்தில் படர்ந்திருக்கும் செருக்கையும் கண்டு குறுஞ்சிரிப்பை பூத்த அவ்விளைஞன், மனதிற்குள், ‘பெண்களின் உள்ளங்களில் புதைந்திருக்கும் இரகசியங்களை வெளிக்கொணர அவர்களைச் சிறிது தூண்டிவிட்டால் போதும் போலவே…’ என்று நினைத்தவனாக அப்பேச்சை அத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்புவது போல் மௌனமாகிவிட, மீண்டும் மௌனமே அங்குப் பாஷையாகிப் போனது அவ்வறுவருக்கும்.

*******

நிமிடங்கள் கரைய, தனது தொண்டையைச் சிறிதே செருமியவன்,

“அருகிலிருக்கும் ஊரில் சிறு வேலை இருக்கின்றது என்பதை மட்டுமே தெரிவித்தீர்கள்.. நீங்கள் செல்லும் ஊர் எதுவென்றோ, அங்கு என்ன வேலையாகச் செல்கிறீர்கள் என்றோ கூறவில்லை, அவை எனக்குத் தேவையும் இல்லை.. ஆனால் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் ஆயுதங்களைப் பார்த்தால் அவ்வேலை சாதாரணமான வேலைப்போல் தெரியவில்லையே?” என்றான் சிறிதளவு இகழ்ச்சியும் குரலில் கலந்து.

கீழே கிடந்த காய்ந்த மரக்குச்சிகளைப் பேச்சுவாக்கில் ஒவ்வொன்றாக நெருப்பில் போட்டவாறே அதன் சுவாலையை அதிகரித்தவனை உறுத்துப் பார்த்திருந்தவர்கள், பதிலொன்றும் உதிர்க்காது அமர்ந்திருக்க, சட்டென்று சிரித்தவன்,

“சரி, எங்குச் செல்கிறீர்கள் என்று கூற வேண்டாம்? ஆனால் உஜ்வாலா ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களான நீங்கள் எதற்கு வர்ம ராஜ்யத்திற்குச் சொந்தமான இவ்வழியில் பயணிக்க முனைந்தீர்கள்? அதற்கான காரணம் என்னவாக இருக்குமென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை என்னால் அடக்க இயலவில்லை..” என்று அவன் கூறி முடிக்கும் முன்பே அதிர்ந்த ஐவரும் ஒரு சேர அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.

“உஜ்வாலா ராஜ்யமா?”

திடுக்கிட்டு அவர்களில் ஒருவன் வினவவும், “ஆம் உஜ்வாலா ராஜ்யமே தான்…” என்று மீண்டும் புன்னகைத்தவனைக் கண்டவர்கள் ஒருவொருக்கொருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள்.

“நாங்கள் உஜ்வாலா ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல..”

பதிலளிக்கும் பெண்ணை, வரையறுக்கப்பட்ட துல்லியத்துடன் எதிரில் இருப்பவர்கள் பேசும் பொழுது, ‘நீங்க கூறுவது நிஜமா?’ என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தும் வகையில் உயர்த்தப்படும் ஒற்றைப் புருவத்துடன், மெள்ள திரும்பிப் பார்த்தவன்,

“ஆம், உஜ்வாலா ராஜ்யமே தான்..” என்றான் அழுத்தம் திருத்தமாகப் பிடிவாதம் தொனிக்கும் குரலில்.

“இல்லை, நாங்கள் அந்த ராஜ்யத்தில் இருந்து வரவில்லை.. எங்களது ராஜ்யத்தைப் பற்றி உங்களுக்கு விளக்கவும் எங்களுக்கு அவசியம் இ…”

மறுப்புத் தெரிவிப்பவள் முடிக்கும் முன்பே தனது கணீரென்ற குரலில்,

“எனக்குத் தெரிந்தவரை ஆள்காட்டி விரலைத்தான் எதனையும் குறிப்பிடுவதற்கோ, எப்பொருளையும் சுட்டிக்காட்டவோ அனைவரும் பயன்படுத்துவர்கள்… அவ்வாறில்லாது வெகு சில நாட்டவர்களே தங்களின் கலாச்சாரத்தில் ஆள்காட்டி விரல்களைச் சுட்டிக்காட்டுவதற்கு உபயோகப்படுத்தாது, தங்களின் கட்டை விரலைக் கொண்டு சைகை செய்கிறார்கள்.. அப்படிப் பார்த்தால் இந்தத் தங்கேதி தேசத்தில் உஜ்வாலா ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் அப்பழக்கம் இருக்கின்றது..” என்று நிறுத்தவும், உள்ளுக்குள் திகைத்துப் பிரமித்துப் போனாலும் முகத்தில் தங்களின் வியப்பைக் காட்டாது அமர்ந்திருந்தார்கள் ஐவரும்.

“அதுமட்டுமல்ல, உஜ்வாலா ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் வீரத்தை, பலத்தை நிரூபிப்பதற்கு விந்தையான ஒரு வித்தையைப் பழகியிருக்கின்றார்கள் என்று செவி வழியாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. கோபம் கொண்ட பொட்டு எறும்புகள் நிரம்பிய கூடைகளில் தங்களின் கைகளையும் கால்களையும் வைப்பதன் மூலமும், எறும்புகளின் கொடுக்கினால் ஏற்படும் உயிர் போகும் வலியை அவர்கள் சப்தமிடாது, முகத்திலும் தங்களின் வேதனையைக் காட்டாது இருப்பதன் மூலமும், தாங்கள் பலசாலி என்று நிரூபிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன்…அதனை இப்பொழுது தான் நேரில் பார்க்கிறேன்…” என்றவாறே தனக்கு அடுத்து அமர்ந்திருப்பவனை மெல்ல திரும்பிப் பார்க்கவும்,

அங்கு எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் அனல் தாங்காது தனது புற்றில் இருந்து வெளிப்போந்து கொண்டிருக்கும் எறும்புகளின் மீது அமர்ந்திருந்தவன், அவ்விளைஞனின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து தான் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து வெகுண்டெழுந்தான்.

அமர்ந்திருந்தவாக்கிலேயே சிறிதும் அசையாது அவனை நிமிர்ந்து ஒரு முறைப் பார்த்த இளைஞன் மெல்ல எழ, பிறந்ததில் இருந்தே பயம், கலக்கம், சஞ்சலம் என்ற வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் போதிக்கப்படவில்லை என்பது போல் வெகு நிதானமாக எழுந்து நிற்பவனைக் கண்டு தானும் எழுந்த அவ்விளம்பெண் கரகரக்கும் குரலில்,

“வழிப்போக்கன் என்று கூறுகிறாய்.. உஜ்வாலா அரசைப் பற்றியும், அவர்களின் பாரம்பரியங்களைப் பற்றியும் வழிப்போக்கன் ஒருவனுக்கு எங்கனம் இவ்வளவு தெளிவாகத் தெரியும்? நீ வழிப்போக்கன் தானா என்ற பெருஞ்சந்தேகம் எனக்குள் இப்பொழுது எழுந்திருக்கிறது.. அதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறாய்?” என்றாள் ஏளனமும் அதே சமயம் கடுமையும் வழியும் தொனியில்.

தன்னைத் திடுமென ஒருமையில் அழைத்தவளைச் சட்டெனத் திரும்பிப் பார்த்த இளைஞன் விழிகளில் விஷமம் படர,

“வழிப்போக்கன் என்றேனே.. அது போதவில்லையா உங்களது சந்தேகத்தை நிவர்த்திச் செய்வதற்கு? வழிப்போக்கன் என்றால் அவனது வழிகளில் எத்தனை எத்தனை மனிதர்களைச் சந்திக்க நேரிடும்.. அது போல் உஜ்வால வம்சத்தைச் சேர்ந்த சிலரை சந்தித்து இருக்கின்றேன்.. அவர்களது வாயிலிருந்து வந்த தகவல்கள் தான் அத்தனையும்..” என்றான்.

என்ன தான் அவன் கூறினாலும் நம்ப மறுத்த மனதை அடக்கத் தெரியாத ஐவரில் ஒருவன், இளைஞனிற்கு வலது புறமாக இருந்தவனைப் பார்க்க, அவர்களின் பார்வையின் பரிமாற்றத்தை கவனித்த இளைஞன் அச்சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தி விநாடி நேரத்திற்கும் கீழாகத் தனது இடையின் இடது புறத்துக் கச்சையில் சொருகப்பட்டிருந்த உறையில்லாத குறுவாளை தனது இடது கரத்தால் எடுத்தவன், கண்ணிமைக்கும் நேரத்தில் அவனது கழுத்தில் சொருகிய அதே வேகத்தில் வெளியே எடுக்க, குறுவாளின் கூர்மையில் உதிரம் நான்கு புறங்களிலும் சிதறித் தெளித்ததில் அதிர்ந்துப் போயினர் மற்ற நால்வரும், அப்பெண் உட்பட.

தங்களுள் ஒரு மனிதனை ஒருவரும் எதிர்பாராத நேரத்தில் அவன் தனது சிறிய குறுவாளைக் கொண்டு கொன்றுப் போட்டிருந்ததைக் கண்டு திகைத்துப் போனவர்கள் சடாரென்று திரும்பிப் பார்க்க, கண் இமைகளை மூடித் திறக்கும் நேரத்திற்குள் தன்னால் கொலை செய்யப்பட்டுக் கீழே சரிந்தவனைத் தனது வலிய கரங்களால் பிடித்துத் தள்ளிவிட்டவன் திரும்புவதற்குள், ஏககாலத்தில் அவன் மீது பாய்ந்தனர் மற்ற மூன்று வீரர்களும்..

**************************

ஆதிநல்லூர் மாநகரம்..

வர்ம ராஜ்யத்தின் தலை நகரம்..

பொழுது புலர்ந்து ஒன்பது நாழிகைக்கு மேலாகிவிட்டதால் கதிரவனின் மஞ்சளும் செந்நிறமும் கலந்த கிரணங்கள் பட்டுத் தெறித்ததில், ஆதிநல்லூர் மாநகரம் முழுவதும் பொன்படலம் ஒன்று போர்த்தியிருப்பதைப் போல் அலங்காரமாய்க் காட்சியளிக்க, மாநகரத்தின் நடுப்பகுதில் வடகிழக்கு திசையை நோக்கிக் கம்பீரமாகக் கட்டப்பட்டிருந்த விஜயேந்திர வர்மனின் அரண்மனை, பொன்னிறக் கதிர்களின் பிரதிபலிப்பால் ஜெகஜ்ஜோதியாய் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

செந்நிறக் கற்களால் நான்கு அடுக்குகளைக் கொண்ட கட்டிடமாக எழுப்பப்பட்டிருந்த அரண்மனையின் மீது மூன்று குமிழ் கோபுரங்களும், அரண்மனையைச் சுற்றி அதன் நான்கு முகப்புகளிலும் நூற்றைம்பது அடிகள் கொண்ட தூண் கோபுரங்களும் கட்டப்பட்டிருக்க, அரண்மனையின் மூன்று கோபுரங்களிலும், தூண்களின் மேற்பகுதியிலும் அலங்கார கலசங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டிருந்தது.

சூரியனின் கிரணம் தங்க கலசங்களை அள்ளுவது போல் தனது கரங்களை அகல விரித்துப் பரப்பியிருந்ததில், தங்கக்கலசங்களின் பிரதிபலிப்பால் வைரமும், வைடூரியமும் கலந்ததைப் போன்ற ஒளியானது பொட்டு பொட்டாய் நகரம் முழுவதிலும் தெளித்திருந்ததில், விஜயேந்திர வர்மனின் கீர்த்தியையும், பெருமையையும் காண்போர் யாவருக்கும் பறைசாற்றிக் கொண்டிருப்பதைப் போன்றே தோன்றியது அக்காலை நேரத்துக் காட்சி.

விஸ்தாரமாக அமைக்கப்பட்டிருந்த அரசவையின் மேல் தட்டின் நடுவே அரசனின் அரியாசனமும், அதற்கு அருகே அடுத்தத் தட்டில் மூன்று சிம்மாசனங்களும் போடப்பட்டிருக்க, மந்திரிகளும், சேனாதிபதிகளும், தளபதிகளும், அமைச்சர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.

அவர்களுக்கு அடுத்து புலவர்களும் மற்றும் பிற முக்கியப் பிரமுகஸ்தர்களும் அமர்வதற்கென்று அமைக்கப்பட்டிருந்த அரியாசனங்களை அவர்களும் நிரப்பியிருக்க, உப்பரிகையில் அரண்மனையைச் சேர்ந்த பெண்களும் பட்டத்து ராணியும் அமர்ந்திருக்க, அன்று விஷேஷமாக அரசவை கூட்டப்பட்டிருந்தது.

அரியாசனத்தில் அமர்ந்த விஜயேந்திர வர்மன் எழுந்து நிற்கும் அனைவரையும் அமருமாறு கையசைக்க, மணித்துளிகள் சில கடந்து தங்கப்பாத்திரங்களில் நிரப்பப்பட்ட மலைகளில் மட்டுமே விளையும் சந்தனங்களையும், அதிகப் பிரகாசமுடைய ரத்தினங்களையும், தங்கத்தால் பிண்ணப்பட்ட அற்புதமான ஆடைகளையும், குவியல் குவியலாக முத்துகளையும், யானைகளுக்கான நூற்றுக்கணக்கான விரிப்புகளையும், கடலில் விளையும் சிறந்த ரத்தினங்களையும், கலசங்களில் வைரங்களையும் வைடூரியங்களையும் மரகதங்களையும் தங்களின் வீரர்கள் ஏந்தியிருக்க, அவைக்குள் நுழைந்தனர்,

வர்ம தேசத்திற்கு விஜயம் செய்திருக்கும் அஷ்வத்தாரா ராஜ்யத்தின் அரசனும், மகிழன் ராஜ்யத்தின் அரசனும், நந்தன் ராஜ்யத்தின் இளவரசனும் ஏகக்காலத்தில்.

அவர்களை எழுந்து நின்று வரவேற்ற விஜயேந்திர வர்மன் தனது உபசரிப்புகளையும் உரையாடல்களையும் தொடர, அவையின் உட்புறச் சுவர்களை ஒட்டியும், வாயிற்களிலும் நின்று கொண்டிருந்த வீரர்களின் கண்களும், விருந்தினர்களுடன் விஜயேந்திர வர்மனுடைய நட்புரையாடல்களைக் கவனித்துக் கொண்டிருந்த மேல்மாடத்தில் அமர்ந்திருந்த பெண்களின் விழிகளும்,

அரசவைக்கு நடுவில் அமர்ந்து அதுவரை தங்களது அரசனையும், ராஜ்யத்திற்கு விஜயம் செய்திருக்கும் அரசர்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த மற்றவர்களின் பார்வையும் சடாரென்று திரும்பியது, அரசவைக்குள் நுழைந்த இளைஞனை நோக்கி.

******

மாநிறத்தில் அகன்று விரிந்த தோள்களும், விசாலமாகப் புடைத்துக் கொண்டு நிற்கும் மார்பும், சிரிப்பா தீர்க்கமான சிந்தனையா என்பதை நிர்ணயிக்க முடியாத அளவில் அழகிய விழிகளில் யாரையும் ஆழம் பார்க்கும் அபாயப் பார்வையும், நேரான நாசியின் கீழ் திருத்தமாக அளவெடுத்து வரைந்தது போன்ற உதடுகளும்,

அவனின் அழகை பலமடங்கு அதிகமாக எடுத்துக்காட்டும் விதத்தில் நுதலில் விழுந்திருக்கும் ஒன்றிரண்டு மயிற்கற்றைகளும், தேசத்திலுள்ள மிகுந்த அழகிய ஆண்களில் ஒருவன் நான் என்பது போல் அழகும் வீரமும் கலந்த தோற்றமும், அவனது உதடுகளில் நெளிந்திருக்கும் புன்முறுவல் அனைத்திலுமே உறைந்து கிடந்தது ஒன்றே ஒன்று தான்.

காண்பவர்களின் கண்களைக் கவர்ந்திழுக்கும் எனது அழகிற்குப் பின்னால், என்னை எதிர்த்தால் என் எதிரியின் உயிர் அவனது உடலைவிட்டுச் செல்லும் நேரத்தை கணிப்பது நானே என்ற அபாயகரமான வீரமே.

வெகு சாதாரண உடையிலும் கம்பீரத்துடன் தோற்றமளிக்கும் அவன் நுழைந்ததுமே அச்சபையே அமைதியாகி விட, அரசனை நோக்கி அதிகாரத்துடனும் ஆளுமை தவழும் முகத்துடனும் நடந்தவன் அரியாசனத்தை அடைந்ததும் அரசனைப் பார்த்தும், அரண்மனைக்கு விஜயம் செய்திருக்கும் மற்ற அரசர்களையும், நந்தன் ராஜ்யத்தின் இளவரசனையும் கண்டு தலை வணங்கியவன் நிமிர, அவனது தோள்பட்டையில் இருந்து வழிந்து காய்ந்திருக்கும் உதிரத்தைக் கண்ட விஜயேந்திர வர்மனின் இதழ்களில் இருந்து, அதுவரை தவழ்ந்திருந்த புன்னகை சட்டென்று மறைந்தது.

“இது என்ன தோற்றம்?”

“மன்னிக்க வேண்டும்.. இத்தோற்றத்தை களைவதற்கான அவகாசம் எனக்கில்லாததால், இவ்வாறே உங்களைச் சந்திக்க வர வேண்டிய சூழ்நிலை, அதற்கு மன்னிப்புக் கோருகிறேன் அரசே..”

மன்னிப்புக் கோரும் அவனது முகத்தில் சிறிதளவும் மன்னிப்பு இறைஞ்சும் சாயலல்லாததையும், அத்துடன் கர்வமும் விஷமமுமே அவனது வதனத்தில் வழிந்துக் கொண்டிருப்பதையும் கண்ட விஜயேந்திரன் ஆழ பெருமூச்சுவிட்டு,

“நேற்று இரவு எங்?” என்று தனது வினாவை முடிக்கவில்லை.

“எனது அறையில் தான் இருந்தேன்..” என்று முடித்தவனைக் கண்டு, விருந்தினர்களாக வந்திருந்த அரசர்களும், இளவரசனும் ஏகக்காலத்தில் பிரமிப்பிலும், திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்ந்தார்கள்.

மாபெரும் அரசனான, பல போர்களில் அசாத்திய வெற்றிப் பெற்றவனான, எதிராளிகள் தன்னை எதிர்ப்பதற்குத் திட்டங்கள் தீட்டும் முன்பே அவர்களை அழித்துவிடும் விஜயேந்திர வர்மரை எதிர்த்து பேசும் துணிவுள்ள இவ்விளைஞன் யார்?

சேனாதிபதிகளும், அமைச்சர்களும், மந்திரிகளும், பெரும் படை வீரர்களும் அமர்ந்திருக்கும் இச்சபையில் அரசரின் வார்த்தைகளை முடிப்பதற்குக் கூட அவகாசமளிக்காது, அவரது கேள்விக்குத் திமிராகவும், அகங்காரத்துடனும் பதில் கூறும் இவன் யார்?

அவர்களின் முகங்களில் துலங்கிக் கொண்டிருக்கும் பிரம்மையையும், மனதிற்குள் பொங்கிக் கொண்டிருக்கும் சிந்தனைகளையும் உணர்ந்துக் கொண்டவனாக, அவர்களின் முகம் நோக்கித் திரும்பியவன் இளநகை பூக்க,

அதுவரை அவனது கர்வத்தைக் கண்டு உள்ளத்தில் திகைப்பும், கோபமும் கொண்டிருந்த மூவரும், அவன் தனது உதடுகளில் புன்னகையைத் தவழச் செய்திருந்தாலும் தங்களை ஆய்ந்து ஆராயும் அவனது ஆழ்ந்த விழிகளைக் கண்டு தங்களையும் அறியாது முறுவலித்தார்கள்.

இளைஞனது சிரிப்பையும், அவனது முறுவலிற்குப் பதிலளிக்கும் வகையில் விருந்தினர்களின் நகைப்பையும் கண்ட விஜயேந்திரன், லேசாகத் தலையை அசைத்தவாறே,

“செவ்வண்ண மலைக்காட்டினுள் ஐந்து உயிரற்ற சடலங்கள் கிடந்ததாகத் தகவல் வந்திருக்கின்றது… உனக்கும் அதற்கும் சம்பந்தமிருக்கின்றதா?” என்றான் கடும் கடினத்தைக் குரலில் கொண்டு வந்தவாறே.

“நான் தான் ஏற்கனவே கூறிவிட்டேனே அரசே, இரவு நான் எங்கிருந்தேன் என்று.. அப்படியிருக்க எனக்கும் அந்தச் சடலங்களிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?”

திமிறாகப் பதிலளித்தவனைக் கண்டு, “கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள் அவர்கள் ஐவரும்.. அதில் ஒருத்தி பெண்…” என்றான் விஜயேந்திரன் சீற்றமும், ஆங்காரமும் முகத்திலும் துலங்க.

“பெண்களைக் கொலை செய்வது விஜயேந்திரவர்ம அரசரின் ராஜ்யத்தில் பெருந்தவறு.. அத்தவறை நான் எந்நாளும் செய்ய மாட்டேன்..”

“அப்படி என்றால் ஆண்களைக் கொடூரமாகக் கொலை செய்வேன் என்கிறாயா?”

“இல்லை, நான் அவ்வாறு கூறவில்லை.. அவர்களைத் துஷ்டமிருகங்கள் ஏதேனும் கொன்றுப் போட்டிருக்கலாம்..”

“துஷ்ட மிருகங்களா? ” என்று சிரித்த விஜயேந்திரன்,

“ஒரு மனிதனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகம் வெளிவந்ததினால் தான் இத்தகைய கொலைகள் நேற்று நடந்திருக்க வேண்டும்..” என்றான் இளைஞனையே கூர்ந்துப் பார்த்தவாறே.

“இப்பிரபஞ்சத்தில் பிறந்திருக்கும் அனைத்து மனிதர்களுக்குள்ளும் ஒரு மிருகம் உறங்கிக் கொண்டுத்தான் இருக்கின்றது அரசே.. அதை எவராலும் மறுக்க இயலாது.. ஆனால் அம்மிருகத்தை உறக்கத்திலேயே வைத்திருப்பதற்கும் எழுப்பிவிடுவதற்கும் காரணம் அவன் சந்திக்கும் சூழ்நிலைகளும், அவனைச் சிக்க வைக்கும் சந்தர்ப்பங்களும் தான்.. நம் தங்கேதி தேசத்தையும், நமது வர்ம ராஜ்யத்தின் குடிமக்களையும், எங்களது வேந்தனாகிய உங்களையும் காக்க வேண்டிய அவசியம் எனக்கேற்பட்டால், எனக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தைத் தட்டி எழுப்ப நான் ஒரு வினாடியும் தயங்க மாட்டேன்..”

தனது இடையில் சொருகியிருக்கும் குறுவாளின் மீது தனது இடது கரத்தை வைத்து, வலது கரத்தை தனது இடது பக்க மார்பில் பதித்து, தனது ஆறடி மூன்றங்குல உயரத்திற்கு அகன்ற மார்பை நிமிர்த்தியவாறே கணீர் என்ற குரலில், அவ்வரண்மனையே அதிர்ந்து எதிரொலிக்கும் சாரீரத்தில் கம்பீரமாகக் கூறியவனைக் கண்டு அங்குக் கூடியிருந்த அனைவரின் முகத்திலும் பெருமையே வழிந்தது, விஜயேந்திரனைத் தவிர.

அரசனின் முகத்தில் இன்னமும் தெளிவில்லாததைக் கண்டவன்,

“அரசே.. மனித மிருகங்களுடன் போரிட சில நேரங்களில் நம்மைப் போன்ற மனிதர்களும் மிருகங்களாக மாற வேண்டியிருக்கிறது.. இப்பிரஞ்சத்தின் விதி அது.. பல உயிர்களைக் காவு வாங்க காத்திருந்த அவர்களை அழிக்கக் கொடியவனாக மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அம்மாற்றத்தை நான் மகிழ்வுடனே ஏற்றுக் கொள்வேன்.. ” என்றவன் மீண்டும் தலை தாழ்த்தி விடைபெற,

வாயிலை நோக்கி நடந்தவன் சட்டென்று நின்று விருந்தினர்களையும், குறிப்பாக நந்தன் ராஜ்யத்து இளவரசனையும் ஒரு முறைப் பார்த்து புன்னகைத்து செல்ல, மீண்டும் மீண்டும் தங்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியவனைக் கண்டு திக்கிட்டு திகைத்துப் போய் அமர்ந்திருந்தார்கள் மூவரும்.

ஊசி விழுந்தால் கேட்கும் நிசப்தமே அச்சபை முழுவதிலும் நிலவ, தீவிர யோசனையில் ஆழ்ந்த விஜயேந்திர வர்மனை நோக்கி திரும்பிய அஷ்வத்தாரா ராஜ்யத்தின் அரசன்,

“அரசே! யார் இவன்? சபையில் அரசருக்கு முன்பும், பெரும் அமைச்சர்களுக்கும் வீரர்களுக்கும் முன்பும் அச்சம் என்பதே அல்லாது பேசிவிட்டுச் செல்லும் இவன் யார்? உங்களை எதிர்த்து பேசும் அதிகாரத்தை இவனுக்குக் கொடுத்தது யார்? இவனது நெஞ்சத்தில் பயமென்பதே இல்லையெனலாம் போலிருக்கிறதே..” என்றான் வாயிலை நோக்கி நடந்து கொண்டிருக்கும் இளைஞனின் முதுகின் மீதே தன் பார்வையைச் செலுத்தி, பின் அரசனின் முகத்தை நோக்கி திரும்பியவாறே.

அஷ்வத்தாரா அரசனின் கேள்வியில் அவனைச் சட்டெனத் திரும்பிப் பார்த்த விஜயேந்திர வர்மன், அவனது சொற்களுக்குப் பின் பொதிந்திருக்கும் பிரமிப்பையும், அவனது முகத்தில் துலங்கிக் கொண்டிருக்கும் திகைப்பையும், இளைஞனைக் கண்டு வியப்பில் பளபளக்கும் அவனது விழிகளையும் கண்டு புருவங்கள் முடிச்சிட,

“இவ்வுலகத்தில் ஜனித்த தினம் முதலாய் பயம் கலக்கம் என்ற வார்த்தைகளுக்குப் பொருள் உணர்ந்திராத, அவனது திட்டங்களுக்கும், செய்கைகளுக்கும், சிந்தனைகளுக்கும் இடையூராக இருப்பது எந்தத் தேசத்து அரசனானாலும் மதியாது, அவர்களை அசட்டை செய்யாது எதற்கும் துணிந்து போராடும் வீரன், பட்டத்து இளவரசன்… வர்ம ராஜ்யத்தின் வருங்கால வேந்தன்.. உதயேந்திரன்… உதயேந்திர வர்மன்… எனது புதல்வன்…” என்றதில் தங்களையும் அறியாது சடாரென்று மூவரும் வாயிலை தாண்டி அடி எடுத்து வைக்கும் அவ்விளைஞனை மீண்டும் திரும்பி பார்த்தனர்..

உதயேந்திர வர்மன்!

வருவான்…. விரைவில்!

39 comments

Comments are closed.